நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை - முதலமைச்சர் அறிவிப்பு | 24 Viral News

நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை – முதலமைச்சர் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணாவால் “தம்பி வா தலைமையேற்க வா” என புகழப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் அவரது பிறந்த தினமான ஜூலை 11 அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசில் நீண்ட காலம் அமைச்சராக பணியாற்றியவர் நாவலர் நெடுஞ்செழியன் என்று தெரிவித்துள்ளார். எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர் சிறந்த சொற்பொழிவாளர் என பன்முகத் திறமை கொண்ட நாவலரின் பேச்சுத் திறனைக் கேட்டு பெரியாரே வியந்ததாக கூறியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களால் தனது கருத்துக்கு வலுச்சேர்த்த நாவலர் நடமாடும் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்” என்ற நூலை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *