இந்தியா - சீனா மோதல் 35 சீன வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் | 24 Viral News

இந்தியா – சீனா மோதல் 35 சீன வீரர்கள் உயிரிழந்திருக்கலாம்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோங், தவுலத் பெக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததால் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இருநாடுகளும் எல்லையில் தங்களது படைகளை குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு திடீரென இரண்டு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இதில், துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தியே வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி, மற்றொரு வீரர் குண்டன் குமார் ஓஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதில் படுகாயமடைந்த 17 பேர் உயரமான பகுதியில் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ராணுவ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த உயிரிழப்பு குறித்து சீனா எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் 35 சீன வீரர்கள் இறந்திருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை கருதுவதாக யு.எஸ் டைம்ஸ் தளம் தெரிவித்துள்ளது. மேலும், லடாக் நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *