தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 2,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 1,358 பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளனர். திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 62 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், சென்னையில் மட்டும் வைரஸ் தொற்று எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 1,487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையின் அருகாமை மாவட்டங்களான செங்கல்பட்டில் 126 பேரும், திருவள்ளூரில் புதிதாக 120 பேரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். காஞ்சிபுரத்தில் 56 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 215 ஆக அதிகரித்தது. இதுதவிர, திருவண்ணாமலையில் 139 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் 157 பேரும், கடலூரில் 63 பேரும், ராணிப்பேட்டையில் 52 பேரும், தூத்துக்குடியில் 51 பேரும் மற்றும் விழுப்புரத்தில் புதிதாக 41 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது. தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 37 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்த 794 பேரில் 623 பேர், சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை சுமார் 24 ஆயிரம் பேர் வரை, குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *